
சென்னை:
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி (37வயது). திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தார். அண்மையில் திருமலா பால் நிறுவனம் அவர்களது நிறுவன வரவு-செலவு கணக்குகளை சரிபார்த்து தணிக்கை செய்துள்ளது. ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்ததாகவும் அந்த பணத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பரின் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அந்நிறுவனம் சார்பில் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் நவீனை நேரில் வரும்படி போனில் அழைத்து விசாரித்ததாகவும் அப்போது பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல்துறையினரிடம் நவீன் கெஞ்சி கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர் வீட்டருகே உள்ள குடிசையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து புழல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து நவீன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings