இதுவரை கடந்த 4 நாட்களில் மட்டும் 10 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் குப்பம், நைனார் குப்பம், கானத்தூர் குப்பம், கரிகாட்டு குப்பம் ஆகிய நான்கு குப்பங்களை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் வெளியூரில் இருந்து வரும் நபர்கள் கடலின் ஆழம் தெரியாமல் குளிக்கும் போது கடல் அலையில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
குறிப்பாக கடந்த 29ம் தேதி மாலை ஸ்நேகா கார்டன் உள்ள கடற்கரையில் 9 பேர் குளிக்க சென்றதில் 5 பேர் கடல் அலையில் சிக்கி மூழ்கினர்.
இரண்டு மணி நேரம் கானத்தூர், கரிகாட்டு குப்பம் மீனவ மக்கள் உதவியுடன் காவல்துறையினர் 18வயது பெண்ணை மட்டும் உயிருடன் மீட்டனர். மற்ற நான்கு பேர் உயிரிழந்தனர்.
புத்தாண்டு அன்று அதிகாலை 5 மணியளவில் விஜிபி அவுட் கடற்கரையில் குளிக்கும் போது இருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை ஆகிய பகுதிகளில் குளித்த நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
ஆக மொத்தம் கடந்த 28ம் தேதி முதல் 1 ம் தேதி வரை 10 கடலில் குளித்து உயிரிழந்து உள்ளனர்.
இதனால் கானத்தூர் காவல்துறை சார்பில் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
வெளியூரில் இருந்து வரும் பொது மக்களுக்கு கடலின் ஆழம் மற்றும் கடலின் சுழற்சி தெரியாமல் குளிக்கும் போது கடல் அலையில் சிக்கி உயிரிழப்பதால் ரிசார்ட் உரிமையாளர்கள் பண்ணை வீட்டில் தங்குபவர்களை கடலில் குளிக்க அனுமதிக்கக்கூடாது, இந்த இடம் குளிப்பதற்கு தடை விதித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றிய மீனவ மக்களை அழைத்து கானத்தூர் உதவி ஆணையர் வெங்கடேசன், கானத்தூர் ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் ஆனந்த் என்பவரை அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினர். ஊர் தலைவர், மீனவர்களை அழைத்து அவர்களிடம் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கி அறிவுரை வழங்கினர்.
இது குறித்து கானத்தூர் உதவி ஆணையர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தடை செய்யப்பட்ட கடற்கரை பகுதியில் தடையை மீறி குளிப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings