
சென்னை:
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கையில் கட்டைப்பையுடன் இளைஞர் ஒருவர் வந்தார். அந்த கட்டைப்பையை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் அவர் கொடுத்தார். அதை வாங்கி பார்த்த காவலர் கட்டைப்பையில் பச்சிளம் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த இளைஞர் நான் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். கட்டைப்பையில் இந்த குழந்தை கீழே கிடந்தது என தெரிவித்தார். இதையடுத்து காவலர் அந்த இளைஞரிடம் குழந்தை எந்த இடத்தில் கிடந்தது? எப்போது பார்த்தீர்கள்? என கேள்விகளை எழுப்ப இளைஞர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால் சந்தேகமடைந்த காவலர் அந்த இளைஞரை விசாரிக்க தொடக்கினார் அவர் இந்த குழந்தை எனக்கு பிறந்தது தான் உங்களிடம் பொய் சொல்லிவிட்டேன் என கூறி கதறி அழுதார். குழந்தையை கொண்டு வந்த இளைஞர் பெயர் பிரவீன்(21வயது). ஊட்டியில் உள்ள கல்லூரியில் படித்த போது அதே கல்லூரியில் படித்த சேலத்தை சேர்ந்த (21வயது) மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். பிரவீன் அரசு வேலைக்காக சென்னை சைதாப்பேட்டையில் தங்கி படித்து வருகிறார். மாணவி கிண்டியில் உள்ள விடுதியில் தங்கி சென்னை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சென்னையில் இருந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். இதனால் மாணவி கர்ப்பமடைந்துள்ளார். விடுதியில் இருந்த மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மாணவியின் தோழிகள் விடுமுறைக்கு ஊருக்கு சென்றதால் விடுதி கழிவறையிலேயே மாணவி குழந்தையை பெற்றெடுத்தார். இதுகுறித்து தனது காதலன் பிரவீனுக்கு தகவல் தெரிவித்தார். இருவரும் திருவல்லிக்கேணி லாட்ஜில் அறையெடுத்து தங்கினர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும். இருவருக்கும் வேலைஇல்லை. குழந்தை கீழே கிடந்ததாக கூறி காவல்துறையில் ஒப்படைத்துவிடுவோம் என முடிவு செய்து கட்டைப்பையில் குழந்தையை எடுத்து கொண்டு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வரும் போது பிரவீன் சிக்கிக் கொண்டார். தற்போது குழந்தையும் மாணவியும் கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings