கோவையில் கணவன் – மனைவி 2 மகள்களுடன் தற்கொலை செய்துகொண்டனர். கடன்தொல்லையா? வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது54). இவரது மனைவி விசித்ரா (46). இவர்களுக்கு ஸ்ரீநிதி (25), ஜெயநிதி (14) ஆகிய மகள்கள் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணி ரைஸ் மில் என்ற பெயரில் அரிசி மில் ஒன்றை ராமச்சந்திரன் செல்வபுரம் பகுதியில் நடத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரைஸ் மில்லில் சுமார் 18 கோடி ரூபாய் அளவிற்கு கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடனில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள ராமச்சந்திரன், தற்போது மது பாட்டில்களுக்கு பயன்படுத்தப்படும் மூடிகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை, ரைஸ் மில் இருந்த வளாகத்திலேயே நடத்தி வந்தார். இந்த வளாகத்திலேயே அவர்களது வீடும் அமைந்துள்ளது.
மகள் ஸ்ரீநிதி கனடாவில் பட்டப்படிப்பு பயின்று வந்துள்ளார். மேலும் அருகில் உள்ள காலியிடத்தில் வீடு ஒன்றை ராமச்சந்திரன் கட்டி வந்ததாக கூறப்படுகிறது. கடந்து சில நாட்களுக்கு முன்பு கனடாவில் இருந்து ஸ்ரீநிதி கோவைக்கு வந்துவிட்டார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் நால்வரும் தூங்கச் சென்றபோது, வீட்டில் பணிபுரியும் பெண் பணியாளரை மறுநாள் வேலைக்கு வர வேண்டாம் என ராமச்சந்திரன் கூறியதாக தெரிகிறது.
இந்தநிலையில் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர்களது வீடும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து ராமச்சந்திரனின் சகோதரி வழக்கம்போல் அவர்களை பார்ப்பதற்காக வீட்டிற்கு வருகை தந்துள்ளார்
.
அப்போது வீட்டில் உள்ள அறை ஒன்றில் 4 பேரும் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது தொடர்பாக செல்வபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நால்வரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து, கடன் தொல்லை காரணமாக 4 பேரும் உயிரிழந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக, செல்வபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல கோடி கடனிலிருந்து மீண்டு வந்த ராமச்சந்திரன், எதனால் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது தெரியாததால், அவரது உறவினர்கள் மற்றும் அருகாமை வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
GIPHY App Key not set. Please check settings