
சேலம்:
ஓமலூர் அருகே குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (68வயது). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், விவசாயம் செய்தும், மாடுகளை வளர்த்தும் பிழைப்பு நடத்தி வருகிறார். பிள்ளைகளும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சரஸ்வதி மட்டும் தனியாக வசித்து வந்தார். தினமும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார். காலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற சரஸ்வதி, மாலை வரை வீடு திரும்பவில்லை.
இதனால், உறவினர்கள் அவரை தேடிப் பார்த்தனர். அப்போது, விவசாய நிலத்தில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. சரஸ்வதியின் காது மற்றும் மூக்கில் இருந்த நகைகள் அறுத்து எடுக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில், 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் வலைவீசி தீவிரமாக தேடி வந்தனர். கொலைக்கு காரணமானவர் கட்டிகாரனூரைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பது தெரியவந்தது. இவர், கொள்ளையடித்த நகைகளை விற்பனை செய்வதற்காக சங்ககிரி மலையடிவாரத்தில் பதுங்கி இருந்தார். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், உடனே அங்கு சென்று நரேஷை பிடிக்க முயன்றனர். அப்போது, அவர் காவல்துறையினரை தாக்கிவிட்டு, தப்பியோட முயற்சித்துள்ளார். நரேஷ்குமாரின் காலில் துப்பாக்கியால் சுட்டுபிடித்தனர். இதில் காயமடைந்த அவர், சங்ககிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதோடு இந்த குற்றசம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings