
கோவை:
கோவையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது செல்போன் மூலம் இன்ஸ்டாகிராம் பக்கங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி ஒருவர் பதிவிட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், தனது புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி சமூகவலைதளத்தில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் அருண் தலைமையிலான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ராஜா(வயது 33) என்பவர், அப்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி சமூகவலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பொறியியல் பட்டப் படிப்பு படித்த ராஜா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆபாச வலைதளப் பக்கங்களை பார்க்கும் பழக்கம் உடைய இவர், பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தனக்கு வரும் பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இதுபோன்ற செயல்பாடுகளால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின்பற்றி வந்துள்ளனர். ராஜாவுடன் தொடர்பில் உள்ள நபர்கள் யார் அவருக்கு பெண்களின் புகைப்படத்தை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
GIPHY App Key not set. Please check settings