மயிலாடுதுறை:
சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள அரசூர் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் பயின்று வரும் மூன்றரை வயது சிறுமியைக் கடந்த 24-ம் தேதி பாலியல் துன்புறுதலுக்கு ஆளாக்கி தலை மற்றும் முகத்தில் கற்களால் தாக்கிய அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனைக் கைது செய்தனர்.
இந்நிலையில், மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் போலீஸாருக்காக போக்சோ சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கிவைத்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி பேசும்போது, குழந்தைகளை எப்படி போலீஸார் அணுக வேண்டும், பெற்றோர் எந்த மாதிரி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது குறித்துப் பேசினார். அப்போது, சீர்காழியில் நடைபெற்ற சம்பவத்தைக் குறிப்பிட்டு “கடந்த வாரம் 3 வயது சிறுமிக்கு நடந்த சம்பவத்தில்கூட, அந்த குழந்தையே தவறாக நடந்து கொண்டுள்ளது. அதை நீங்கள் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் தெரியும். எனக்கு கிடைத்த அறிக்கையின்படி, காலையில் அந்தப் பையனின் முகத்தில் அந்தக் குழந்தை துப்பியுள்ளது. அது ஒரு காரணம். அதனால் இரு பக்கமும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். எனவே வருமுன் காத்தல் என்ற வகையில் பெற்றோர், அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஒரு உணர்திறனை நாம் ஏற்படுத்த வேண்டும்” என்று பேசினார்.
மாவட்ட கலெக்டரின் இந்தப் பேச்சு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெகுவாக பரவிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளைச் சேர்ந்தோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “மயிலாடுதுறை மாவட்ட கலெக்டராக இருந்த ஏ.பி.மகாபாரதிக்குப் பதிலாக, ஈரோடு மாநகராட்சி ஆணையர் எச்.எஸ்.காந்த் நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings