சென்னை:
பள்ளிகளில் மாணவ மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என யாராக இருந்தாலும், அவர்களின் குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் கல்விச்சான்று ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் அந்த பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. இதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசும்போது, “மாணவர்களின் குறைகளைத் தெரிவிக்க மனசுப்பெட்டி என்ற புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அச்சமின்றி தங்கள் பிரச்சினைகளைத் தெரிவித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் உடனடியாக புகார்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வரைவு அறிக்கையைத் தயார் செய்யவும் முடிவு செய்துள்ளோம். பாலியல் தொடர்பாக ஏற்னெவே 238 புகார்கள் வந்துள்ளன. அதில் 11 பேர் குற்றம் இல்லை என்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.7 பேர் இறந்துவிட்டனர். 56 பேர் மீதான விசாரணை குறித்து மார்ச் மாதம் 10-ம் தேதி இறுதி ஆணைகள் பிறப்பிக்கப்படும். இது தவிர 58 பேர் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்விச் சான்றுகள் ரத்து செய்யப்படும். புகார் நிரூபிக்கப்பட்டால் ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறினார்
GIPHY App Key not set. Please check settings