
சென்னை:
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள பிரபலமான ஓட்டலில் கஞ்சா விருந்து நடப்பதாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஓட்டலுக்குள் காவல்துறையினர் திடீரென நுழைந்து அறைகளைப் பார்வையிட்டனர். அப்போது ஓர் அறையில் இளைஞர்கள் கும்பலாக சினிமா பாடல்களை ஒலிக்கவிட்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் கஞ்சா போதையில் நடனமாடியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சென்னை சூளை ஜெகதீஸ்வர்(வயது 34), கொளத்தூர் சந்தோஷ்(வயது 27), அம்பத்தூர் தீபக்(வயது 27), காமேஷ்(வயது 25), புழல் சூரப்பட்டு அக்சய் ராஜீ(வயது 21), திருவள்ளூர் ரோகித்(வயது 21), கிருஷ்ணபரிக்(வயது 20), ஜிலான் (வயது 28), சரத்குமார்(வயது 32), பூந்தமல்லி மதன்குமார்(வயது 29) ஆகிய 10 பேரையும் காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்களிடமிருந்து கஞ்சா, உயர் ரக கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையின் போது கைது செய்யப்பட்ட ஜெகதீஸ்வர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளார். இதைக் கொண்டாடும் வகையில் அவர் நண்பர்களுக்கு ஓட்டலில் விருந்து வைத்துள்ளார். அப்போது கஞ்சா பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜெகதீஸ்வர் சினிமாவில் நடித்துள்ளார் எனவும் அவருடன் கைதானவர்களில் சிலர் வழக்கறிஞர், யூடியூபர், பிசியோதெரபி உட்பட பல்வேறு பணிகளைச் செய்துவருவது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
GIPHY App Key not set. Please check settings