சென்னை:
ராயப்பேட்டை, ஜானிகான் 1-வது தெருவைச் சேர்ந்தவர் மகாதீர் முகமது( 27). இவரது சகோதரர் அஸ்மத்(32). தனியார் நிறுவன மேலாளர்.
ராயப்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் வைப்புத் தொகை செலுத்துவதற்காக, அஸ்மத் தன் சகோதரர் மகாதீர் முகமதுவிடம், கடந்த 10-ம் தேதி 17 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மகாதீர் முகமது சென்று கொண்டிருந்தார்.மெரினா காமராஜர் சாலையில், பார்த்தசாரதி கோவில் நுழைவாயில் அருகே பிற்பகல் 3:50 மணியளவில் சென்றபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேர் அவரை மடக்கினர்.
போலீசார் எனக்கூறி அறிமுகப்படுத்தியவர்கள், வாகனத்தைச் சோதனை செய்து, மகாதீர் முகமது வங்கியில் செலுத்த எடுத்துச் சென்ற பணத்தைக் கைப்பற்றினர். பணத்திற்கான ஆவணங்கள் உள்ளதா எனக் கேட்டபோது, மகாதீர் முகமது இல்லை என்றதும், ரூ.17 லட்சம் பணத்தை வாங்கியவர்கள், மெரினா காவல் நிலையத்தில் பெற்றுச் செல்லுமாறு கூறி சென்றனர்.இதையடுத்து, மெரினா காவல் நிலையத்திற்கு மகாதீர் முகமது ஆவணங்களுடன் சென்றார். அப்போது, பணத்தைப் பறிமுதல் செய்தது போலீசார் இல்லை என்பது தெரிய வந்தது. மெரினாவில் பட்டப்பகலில் போலீஸ் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம், காவல் துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, டம்மி போலீசார் குறித்து மெரினா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து திருடர்கள் குறித்து விசாரித்தனர்.
இதில், கோயம்புத்தூரைச் சேர்ந்த பவா(31), விஜயராஜ்( 34), மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த அருண் தமிழ்ச்செல்வன்( 24), ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் அவர்களது சொந்த ஊரில் வைத்து போலீசார் கைது செய்தனர். 1.75 லட்சம் ரூபாய், 6 சவரன் நகை, 1.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள், நான்கு மொபைல் போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



GIPHY App Key not set. Please check settings