திருச்சி:
திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் அபுதாபி, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை 3.30 மணிக்குத் திருச்சியிலிருந்து சிங்கப்பூர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தனர்.
அப்போது நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த உம்மா ஹமீது நாச்சியார் (வயது 62) என்ற பெண் பயணி தனது உடைமையில் மறைத்து ரூ.18.26 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை சிங்கப்பூருக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதனைப் பறிமுதல் செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அதனை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings