
சேலம்:
சேலம் வாழப்பாடி அருகே மது குடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் பெரியப்பாவை தலை,உடல், தனித் தனியே துண்டு துண்டாக அறுத்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையம் ஊராட்சி குறிச்சி நகரை சேர்ந்த, கூலித்தொழிலாளி பெரியசாமி,(வயது67) . இவரது தம்பி மகன் செல்வராஜ்(30). பட்டதாரியான இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
மது பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ், அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர்வர்களிடம் பணம் வாங்கி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சம்பவத்தன்று மதியம் தோட்டத்தில் இருந்த பெரியப்பா பெரியசாமியை கண்ட செல்வராஜ், அவரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். இதற்கு பெரியசாமி பணம் கொடுக்காமல் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், பெரியப்பாவை கத்தியால் குத்தி தலை, உடலை துண்டு துண்டாக அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்த கத்தியுடன் பெரியசாமியின் உடலுக்கு அருகிலேயே செல்வராஜ் பித்து பிடித்தது போல் அமர்ந்திருந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏத்தாப்பூர் போலீசார், செல்வராஜை பிடித்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும், பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். செல்வராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings