
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஞானசேகரன்
அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறத்தில் உள்ள கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் 37 வயதுடய ஞானசேகரன். சிறு வயதில் இருந்தே அண்ணா பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் வளர்ந்ததால் பல்கலைக்கழக வளாகத்தின் அனைத்து இடங்களையும் ஞானசேகரன் அறிந்து வைத்துள்ளார்.
பல்கலைக்கழகத்திற்குள் செல்ல 7 வழிகள் இருக்கும் நிலையில், யாருக்கும் தெரியாமல் எந்த இடத்தில் சுற்றுச் சுவரை ஏறி குதித்து உள்ளே செல்ல முடியும் என்பதையும் ஞானசேகரன் நன்கு அறிந்து வைத்துள்ளார் அத்துமீறல்களை அரங்கேற்றுவதற்காக பல்கலைக்கழகத்திற்குள் நுழைய ஞானசேகரன் தேர்ந்தெடுத்த இடம் தான் சூர்யா நகர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள கூவம் நதிக்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த சூர்யாநகர் பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாமல், ஆள் நடமாட்டமின்றி காணப்படும் இடத்தில் சுவர் ஏறி குதித்து ஞானசேகரன் உள்ளே சென்றுள்ளார். இப்படி உள்ளே செல்லும் போது, தனியாக இருக்கும் மாணவிகளிடம் காவலர் எனக் கூறி ஞானசேகரன் பலமுறை அத்துமீறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் இருக்கும் மாணவிகளை வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்புவேன் என மிரட்டி, பாலியல் ரீதியாக தொல்லை குடுப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே பாணியில் தற்போதும் வன்கொடுமையில் ஈடுபட்ட நிலையில் தைரியமாக ஒரு மாணவி அளித்த புகாரால் காவல்துறையிடம் வசமாக சிக்கியுள்ளார் ஞானசேகரன். இவரது குற்றப் பின்னணி குறித்து விசாரித்த போது பல பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
கோட்டூர்புரம் மயிலாப்பூர், வேளச்சேரி, மந்தைவெளி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 15-ற்கும் மேற்பட்ட திருடு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் ஞானசேகரன் மீது இருப்பதால் 2013-ஆம் ஆண்டில் இருந்து குற்ற பதிவேட்டில் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து காவல்துறையின் கண்காணிப்பு வளையத்தில் ஞானசேகரன் இருந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
அடையாறு காந்திநகர் பகுதியில் சாலையோர நடைபாதையில் பிரியாணி விற்பனை செய்து வந்த ஞானசேகரன் தினந்தோறும் பிரியாணிக் கடை விற்பனையை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு மாணவிகளிடம் அத்து மீறுவதையும் வழக்கமாக செய்கிறார் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கோட்டூர்புரம் போலீசாரால் கைது செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஞானசேகரனின் செல்போனில் பல்வேறு வீடியோக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் ஞானசேகரன் இது போன்று வேறு ஏதேனும் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாரா! என்று விசாரனை நடத்தி வருகின்றனர்.
#annauniversityissues #abuse #annauniversity #besafe

GIPHY App Key not set. Please check settings