
சென்னை:
சென்னை அண்ணாநகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற புகார்தாரரை போலீசார் தரக்குறைவாக நடத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டனர்.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு தலைவரும், கிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையருமான சரோஜ்குமார் தாக்கூர் தலமையிலான புலனாய்வு குழுவை அமைத்தது மேல் நடவடிக்கைகாக குழு, குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் மற்றும் சதீஷ் ஆகியோரைக் கைது செய்தது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக முறையான விசாரணை நடத்தவில்லை என்ற புகாரில் பெண் காவல் ஆய்வாளர் ராஜியை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. அதேபோல், அண்ணாநகர் 103வது வார்டு அதிமுக செயலாளர் சுதாகரையும் கைது செய்தது.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சதீஷ் பெயரை வழக்கிலிருந்து விடுவிக்க, அவரிடம் இருந்து பணம் பெற்றுத் தருவதாக சிறுமியின் தாயாரிடம் அதிமுக 103வது வார்டு செயலாளர் சுதாகர் கட்டப்பஞ்சாயத்து செய்ததை சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட குற்றவாளி சதீஷ்க்கு ஆதரவாக இருந்து, அவருக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்ததும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுதாகர் கைது செய்யப்பட்டார்.
கைதான இருவரும் எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது. அவர்களை வருகிற 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் ராஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதிமுக பிரமுகர் சுதாகர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
GIPHY App Key not set. Please check settings